
கொழும்பு, ஏப் 1
சாதாரணமாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் சிலரின் தூண்டுதலின் மத்தியிலேயே பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் போராட்டமாக மாறியுள்ளது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவினை கோருவதற்காக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
எனவே இந்த சம்பவத்தின் பின்னணியில் அரசியல் அடிப்படை வாதிகளே செயற்பட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது.
அவ்வாறு அரசியல் அடிப்படைவாதிகள் செயற்பட்டிருப்பின் அதனை முன்னெடுத்தவர்கள் யார் என ஊடகவியலாளர்களினால் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர், அதனை இந்த தருணத்தில் வெளிப்படுத்த முடியாது.
இந்த விடயம் குறித்த விசாரணைகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.
விசாரணைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கு முன்னர், எவ்வாறு மதம் மற்றும் ஏனைய அடிப்படைவாத செயற்பாட்டால் இந்த விடயம் நிகழ்ந்துள்ளது என்பதை குறிப்பிட முடியும் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மத அடிப்படை வாதமாக கருத முடியாது.
எவ்வாறாயினும், மிரிஹானையில் உள்ள ஜனாதிபதியின் பிரத்தியேக இல்லத்துக்கு அருகில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அவ்வாறு கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்ட பெருமளவானோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் அதிகமானோர் அடிப்படைவாதிகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அரபு வசந்தத்தை இந்த நாட்டில் ஏற்படுத்துவோம் என்று அவர்கள் கோசம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தியதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை அடிப்படைவாதமாகவோ தீவிரவாதமாகவோ கருதக்கூடாது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு கூறுவதன் மூலம் இந்த நிலைமை மேலும் மோசமடையும்.
இது விரக்தி அடைந்த மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டமாகும்.
அரசாங்கம் இதனை உணர வேண்டும்.
அடுத்தவாரம் நாடாளுமன்றை கூட்டி, பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை அடைவதற்கு சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.