கச்சதீவு அரசியல் பிரசார் மேடை அல்ல: ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

செய்திகள் முக்கிய செய்திகள் 2

இருநாட்டு உடன்பாடுகளின் அடிப்படையில் இந்தியாவால் வழங்கப்பட்ட கச்சதீவை இனி இந்தியா மீளப்பெறமுடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒரவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில் –

கச்சதீவு அரசியல் பிரச்சார மேடை அல்ல, அது இரு நாடுகளின் இணக்கப்பாட்டுடன் இலங்கைக்கு சொந்தமாக வழங்கப்பட்ட ஒரு விடயம்.
ஆனால் தற்போது இந்திய நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கச்சதீவு விவகாரம் பேசுபொருளாக சூடுபிடித்துள்ளது.

தமிழகம் பாண்டிச்சேரி உட்பட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் இருந்து தமிழ் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவதற்கான தேர்தல் களமாக உள்ள நிலையில் கச்சதீவை இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியே இலங்கையிடம் பறிகொடுத்ததாக அண்மையில் இந்திய பிரதமர் மோடி தமிழ்நாட்டில் தெரிவித்திருந்தார்.

ஆனால் இரு நாடுகளுக்கான எல்லை நிர்ணயத்தின்போது கச்சதீவை எந்தப்பக்கம் வைப்பதென்று தீர்மானிக்கும்போது அது இலங்கை பக்கமாக உள்ளடக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான சூழலில் தமிழ் நாடு தேர்தல் களம் முன்னர் எப்போதும் இல்லாதவாறு தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழநாட்டு மீனவர்கள் இலங்கை மீதும் இந்திய மத்திய அரசின் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகின்ற நிலையில் கச்சதீவு விவகாரம் தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகளால் தேசியவாத நிகழ்ச்சி நிரலாக மாற்றமடைந்துள்ளது.

ஆனால் கச்சதீவு 1974 ஆம் ஆண்டுமுதல் இலங்கையின் நிலப்பரப்பாகவே இருந்துவருகின்றது இது தேர்தலுக்கான கோசமே அன்றி வேறொன்றும் கிடையாது.

இதேவேளை இவ்விடயம் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்திய மத்திய அரசின் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் இது உடன்பாடுகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட விடயம் அதனை இனிப்பெறமுடியாது என்றும் அதனை மீறிப் பெறவேண்டுமாயின் யுத்தம் தான் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.