வெளிநாட்டு தரப்பினர் எவரும் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை: சபாநாயகர்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

உள்ளக மட்டத்தில் குறைப்பாடுகளுடன் செயற்படும் போது பிற தரப்பினர் தலையிடுவார்கள். அறகலயவில் ஆரம்பத்தில் இருந்து அவ்வாறான தன்மையே காணப்பட்டது. நாட்டின் இறையாண்மைக்கு வெளி தரப்பினர் அச்சுறுத்தல் விடுத்ததாக நான் அறியவில்லை. மக்களின் இறையாண்மைக்கு இலட்சக்கணக்கான மக்களே அச்சுறுத்தல் விடுத்தார்கள். இந்நிலைமை எதிர்காலத்தில் தோற்றம் பெறாத வகையில்  அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவை நோக்கி குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான  விமல் வீரவன்ச,அரகலய சந்தர்ப்பத்தில் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயற்பட்ட சர்வதேச தரப்பினர் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு வலியுறுத்தினார். இதற்கு பதிலளிக்கையில் சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சபாநாயகர் சபைக்கு மேலும் அறிவித்ததாவது,

மக்களின் இறையாண்மையை இலட்சக்கணக்கான மக்களே  அச்சுறுத்தினார்கள். அரகலய சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற கட்டிடத்தை சுற்றி வளைப்பதற்கு ஒரு தரப்பினர் வருகை தந்தார்கள். பாரிய போராட்டத்துக்கு மத்தியில் பாராளுமன்றத்தை பாதுகாத்தோம்.

நெருக்கடியின் போது வெளிநாட்டு தரப்பினர் எவரும் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை.பாராளுமன்றத்தை சுற்றிவளைக்க முற்பட்டது இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட பாரியதொரு அச்சுறுத்தலாகும்.

 உள்ளக மட்டத்தில் குறைப்பாடுகள் காணப்படும் போது வெளி தரப்பினர் தலையிடுவார்கள்.இது இயல்பானதே எமது தரப்பிலும் பல குறைப்பாடுகள் காணப்பட்டன.அரகலயவில் ஆரம்பத்தில் இருந்து அது வெளிப்பட்டது.ஆகவே எதிர்காலத்தில் இவ்வாறான நிலை தோற்றம் பெறாத வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.