
அரசாங்கம் திருடர்களைப் பாதுகாப்பதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் தற்போதைய அரசாங்கம் திருடர்களைப் பிடிப்பதற்காக சட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் ஊழல் ஒழிப்பை அரசியல் கோசமாகக் பயன்படுத்தும் யுகம் முடிவுக்கு வரும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தெல்தெனிய புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை இன்று (15) திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மை சட்டத்தை அமுல்படுத்துவதில் தங்கியுள்ளது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு நாடு என்ற சர்வதேச அங்கீகாரம் சட்ட கட்டமைப்பின் செயற்பாட்டில் அடங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.
நாட்டில் சட்டத்தின் ஆட்சி மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும். சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு சொத்துக்களை அழித்தால் அங்கே சட்டமே இருக்காது. ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மை சட்டத்தின் ஆட்சியிலேயே தங்கியிருக்கிறது. நீதி நிலைநாட்டப்படும் போது மாத்திரமே நாடு என்ற வகையில் அங்கீகாரம் கிடைக்கும். இல்லாவிட்டால் நாட்டில் அபிவிருத்தி இருக்காது. முதலீடுகளை எதிர்பார்க்கவும் முடியாது. அதனால் புதிய சட்டக் கட்டமைப்பை நாட்டில் ஏற்படுத்தியிருக்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டில் தற்போது புதிய பொருளாதார மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம். அதற்காக பல சட்டங்களை கொண்டுவர சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதலாவதாக மத்திய வங்கிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, மத்திய வங்கி சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது மின்சார சபை மறுசீரமைப்புச் சட்டத்தை சமர்ப்பித்துள்ளோம். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கு மின்சார சபையின் நஷ்டமும் ஒரு காரணமாகும். வலுவான மின்சார சபையை செயற்படுத்த வேண்டும். அதனால் அந்த சபையின் மீது அரசாங்கம் கொண்டிருக்கும் உரிமைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
மேலும் மூன்று சட்ட மூலங்களை அரசாங்கம் அமைச்சரவையில் சமர்பித்துள்ளது. திங்கட்கிழமை அமைச்சரவையில் அதற்கான அங்கீகாரம் பெறப்படும். அதன் கீழ் கடன் முகாமைத்துவத்தையும் நாம் முன்னெடுத்திருக்கிறோம்.
2035-2040 ஆண்டுக்குள் கடன் கட்டுப்பாடு 75% வரையில் கொண்டு வரப்பட வேண்டியது அவசியம். அதற்காக நாட்டின் கடன் முகாமைத்துவச் சட்டத்திற்கு அமையாக அரசாங்கம் செயற்பட வேண்டும்.
இன்று அரசாங்கத்துக்குச் சொந்தமான சொத்து பற்றி எவருக்கும் தெரியாது. பொது நிதி நிர்வாகத்திற்கான சட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. நியூசிலாந்து முதலில் இந்த முறையை ஆரம்பித்தது. அதன்பிறகு இங்கிலாந்து, அவுஸ்திரேலியாவைப் போல் இந்தியாவும் அதை அமுல்படுத்தியுள்ளது. இலங்கை அதன் புதிய வடிவத்தை சமர்பித்திருக்கிறது.
இறக்குமதி பொருளாதாரத்தில் இருந்து ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு நாம் மாற வேண்டும். அதற்கான பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும். அதன்படி சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளோம். அதிலிருந்து நாம் வெளியேற முடியாது. சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறியதாக முன்னர் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இப்போது அது சட்டப்படி செயல்படுத்தப்படுவதால் ஒப்பந்தங்களை மீற முடியாது.
இதை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இல்லையேல் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நாம் எதிர்பார்க்கும் ஆதரவு கிடைக்காது. சர்வதேச நாணய நிதியத்துடனான ஜூன் மாத அமர்வுகளுக்கு பின்னர் இந்த சட்டங்கள் கொண்டு வரப்படும்.
மேலும் நமது நாட்டில் ஊழல் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. சர்வதேச நாணய நிதியமும் எமக்கு கடன் வழங்கிய நாடுகளும் எம்முடன் இது தொடர்பில் கலந்துரையாடின.
இது தொடர்பான ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஊழல் தடுப்புச் சட்டம் 2023 இல் கொண்டு வரப்பட்டு, 2024 இல் திருத்தம் செய்யப்பட்டது.
அதன்படி, இந்த அரசாங்கம், கடந்த இரண்டு வருடங்களில் 03 முக்கிய விடயங்களை நிறைவேற்றியுள்ளது. நீதி நிர்வாகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி பலப்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம், ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கத் தேவையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மேலும், ஊழல் தடுப்புச் சட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன. இந்த பணிகளுக்கு அனைவரின் ஆதரவும் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.