அதை மாற்றியமைக்க வேண்டும் – விராட் கோலி

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

பெங்களூரு,18

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான ஐ.பி.எல்.-ன் 17-வது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. மேலும் இந்த தொடரின் சுவாரஸ்யத்தை கூட்ட கடந்த சீசனில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை கொண்டுவரப்பட்டது. பொதுவாகவே ஐ.பி.எல். தொடரில் பவுலர்களுக்கு கருணை கட்டாமல் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவது வழக்கமாகும்.

ஆனால் இந்த வருடம் ஒரு படி மேலே சென்ற பேட்ஸ்மேன்கள் பெரும்பாலான போட்டிகளில் எதிரணியின் பந்துவீச்சை சரமாரியாக அடித்து நொறுக்கி ரன் குவித்து வருகிறார்கள். இப்படி பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்குவதற்கு பி.சி.சி.ஐ. கடந்த வருடம் அறிமுகப்படுத்திய இம்பேக்ட் வீரர் விதிமுறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த விதிமுறையால் ஒவ்வொரு அணியும் எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனுடன் விளையாடுகிறது.

எனவே இம்பேக்ட் விதிமுறை ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் போன்ற ஆல்ரவுண்டர்கள் உருவாவதை தடுப்பதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா சமீபத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் அதை ஏற்றுக்கொள்ளும் விராட் கோலி இந்த விதிமுறையை பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ரோகித் சர்மா கூறுவது சரிதான். அவரது கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன். விளையாட்டில் பொழுதுபோக்கு என்பது ஒரு அம்சமாகும். இந்த விதிமுறையால் பவுலர்கள் ஒவ்வொரு பந்திலும் நாம் பவுண்டரி அல்லது சிக்சர் கொடுப்போம் என்று நினைத்துக்கொண்டே பந்து வீசுகின்றனர். இது போன்ற ஒன்றை நான் அனுபவித்ததில்லை. நாம் உயர்மட்ட கிரிக்கெட்டை விளையாடுகிறோம்.

அதில் குறிப்பிட்ட அம்சம் மட்டும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. பேட்டுக்கும் பந்துக்கும் சமநிலை கொண்டிருப்பதில் ஒரு அழகு இருக்கிறது. ஒவ்வொரு அணியிலும் பும்ரா அல்லது ரஷித் தான் இருக்க மாட்டார்கள். சொல்லப்போனால் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் இருப்பதால்தான் நானும் பவர் பிளே ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறேன். ஏனெனில் 8-வது இடத்தில் ஒரு பேட்ஸ்மேன் காத்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.

இருப்பினும் அது சமநிலையை குலைக்கிறது என்று நானும் நினைக்கிறேன். இந்த சூழ்நிலையில் அதை மறுபரிசீலனை செய்வோம் என்று ஏற்கனவே ஜெய் ஷா பாய் கூறியிருந்தார். எனவே விரைவில் சமநிலை கொண்டுவரப்படும் என்று நம்புகிறேன். பவுண்டரி, சிக்சர்கள் மட்டும் ஆர்வத்தை ஏற்படுத்தாது. 160 ரன்களை கட்டுப்படுத்துவதிலும் சுவாரசியம் இருக்கும் என்று நான் சொல்வேன்" எனக் கூறினார்.