பிழையைத் திருத்திக்கொள்ளுமாறு முதலமைச்சருக்கு அறிவுறுத்து

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 2

தாம் இழைத்த பிழையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உடனடியாக திருத்திக்கொள்ள வேண்டுமென எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இது விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில், தங்களால் ஆற்றப்பட்ட உரையின் பிரதியுடன் கடந்த 2017.06.14 அன்று என்னிடம் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு நன்றிகள். அது தொடர்பில் தங்களின் கவனத்திற்காக கீழே சில விடயங்களை குறிப்பிட விரும்புகிறேன்.

உங்களால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவினால் 04 அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் பிரதியும் தங்களுக்கு கிடைத்துள்ளது. அதில் இருவர் குற்றவாளிகள் எனவும், ஏனைய இரண்டு பேரும் குற்றமற்றவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

விசாரணை குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு செயற்படவுள்ளதாக நீங்கள் மாகாண சபையில் கூறியிருந்தீர்கள். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட மாகாண அமைச்சர்கள் இருவரையும் பதவி விலகுமாறு அறிவித்துள்ளீர்கள். அந்த தீர்மானம் தொடர்பாக யாரும் முறைப்பாடு எதனையும் மேற்கொள்ளவில்லை.

விசாரணை குழுவால் குற்றவாளிகளாக பெயரிடப்படாத மாகாண அமைச்சர்கள் இருவர் தொடர்பாக உங்களால் எடுக்கப்பட்;ட நடவடிக்கைக்கு எதிராக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாட்டின் காரணமாக நியாயமான நிலைப்பாட்டின் அடிப்படை தர்மங்கள் மீறப்பட்டுள்ள அதேவேளை, அது அநாவசியமான செயற்பாடாக கருதப்படுவதாகவும் சம்பந்தன் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.