பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

முக்கிய செய்திகள் 2

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், முதல் தவணைக்கான மூன்றாம் கட்ட கற்றல் நடவடிக்கைகளுக்காக இன்று (20) ஆரம்பிக்கப்படவுள்ளன.

முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இன்றைய தினம் மூடுவதற்கு வடமேல் மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், புத்தளம் மாவட்ட செயலாளர் மற்றும் வடமேல் மாகாண பிரதம செயலாளர் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி புத்தளம் வலயத்தில் 213 பாடசாலைகளும் சிலாபம் வலயத்தில் 158 பாடசாலைகளும் இன்று மட்டும் மூடப்படவுள்ளன.

இதேவேளை, நிலவும் மழையுடனான வானிலையினால் எதிர்நோக்கும் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் தமது செயற்பாட்டு அறைக்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

24 மணிநேரமும் இயங்கும் செயற்பாட்டு அறைக்கு இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என அந்த நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தெரிவித்துள்ளார்.