ஐக்கிய மக்கள் சக்தியின் முல்கிரிகல தொகுதி அமைப்பாளர் ஐ.தே.கவில் இணைவு

முக்கிய செய்திகள் 1

ஐக்கிய மக்கள் சக்தி அம்பாந்தோட்டை மாவட்டம் முல்கிரிகல தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்டு வந்த நிமல் பிரேன்சிஸ்கோ, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்து நேற்று மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்டார்.

அவருக்கு கடசியின் கட்சி உறுப்புரிமை அட்டையைக் கையளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (21) கட்சி தலைமையகமாக சிறிகொத்தவில் இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன அவருக்கான கட்சி உறுப்புரிமை அட்டையைக் கையளித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் மனுஷ நாணயக்கார இதுதொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டுள்ள பலர் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொள்வதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அதிகமானவர்கள் எம்முடன் இணைந்துகொள்வார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி தொகுதி அமைப்பாளர்களாக இருந்த பலர் மீண்டும் எம்முடன் இணைந்துகொண்டுள்ளனர்.இன்னும் பலர் இணைந்துகொள்ள இருக்கின்றனர்.

அதேபோல், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஒரு சில தீர்மானங்கள் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களும் தற்போது அந்த கட்சியில் விரக்தியடைந்துள்ளனர்.

அதனால் அவர்களில் அதிகமானவர்கள் விரைவில் எம்முடன் இணைந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது என்றார்.