தைவான் அதிபர் லாய் சிங் டேவுக்கு தலாய் லாமா வாழ்த்து

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

தைபே:21

தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் சிங் டே சமீபத்தில் பதவியேற்றார். தைபே நகரத்தில் உள்ள அதிபர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

தைவான் நாட்டை சீனா நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகிறது. சமீபகாலமாக சீனாவிடம் இருந்து தைவானுக்கு ராணுவ அழுத்தம் அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில் தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் பதவியேற்றார். அவரை ஒரு பிரிவினைவாதி என சீனா விமர்சித்துள்ளது.

இதற்கிடையே, பதவியேற்பு விழாவின்போது பேசிய வில்லியம் லாய், தைவானை மிரட்டுவதை சீனா நிறுத்திக் கொள்ளவேண்டும். தைவானின் ஜனநாயகத்தை சீனா ஏற்றுக்கொள்ள வேண்டும். சீனாவின் அச்சுறுத்தலைக் கண்டு தைவான் பின்வாங்காது. தைவானுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிலையில், தைவானின் புதிய அதிபர் லாய் சிங் டேவுக்கு தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தலாய் லாமா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தைவானில் ஜனநாயகம் எவ்வளவு உறுதியாக வேரூன்றியுள்ளது என்பதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. தைவான் மக்கள் ஒரு செழிப்பான, வலுவான ஜனநாயகத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், பெரும் செழுமையையும் அடைந்துள்ளனர், அதே நேரத்தில் அவர்களின் வளமான கலாசார பாரம்பரியங்களையும் பாதுகாத்துள்ளனர். தைவான் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் உள்ள சவால்களை சந்திப்பதில் நீங்கள் ஒவ்வொரு வெற்றியையும் பெற விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.