புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஒத்துழைப்பை ஆராய தாய்லாந்து தூதுக்குழு இலங்கை விஜயம்

முக்கிய செய்திகள் 2

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஒத்துழைப்பை ஆராய்வதற்காக தாய்லாந்து அதிகாரிகள் மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவொன்று நாட்டுக்கு விஜயம் செய்துள்ளதோடு, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் விசேட கலந்துரையாடலொன்றிலும் கலந்து கொண்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

வெளியுறவுகள் அமைச்சு, வலு சக்தி அமைச்சு, தாய்லாந்து தூதரகம், தாய்லாந்து மின்னுற்பத்தி நிறுவனம், பி.டி.டி. நிறுவனம் மற்றும் குளோபல் பவர் சினெர்ஜி பப்ளிக் கம்பெனி லிமிடெட் உட்பட பல்வேறு தாய்லாந்து நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

தாய்லாந்து பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில், எதிர்கால ஒத்துழைப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறு மற்றும் அவற்றை மதிப்பிடுவதற்காக, குறிப்பாக மின்சார உற்பத்தியில் கவனம் செலுத்துவதற்காக இப்பிரதிநிதிகள் குழு இலங்கை வந்துள்ளதாக அமைச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, மின்சாரத் துறைக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்கள், பலதரப்பு இணைப்புகள், முன்மொழியப்பட்ட துறைசார் சீர்திருத்தங்கள், புதுப்பிக்கத்தக்க வலுசக்தியில் தேவையான முதலீடுகள், பசுமை ஹைட்ரஜனின் சாத்தியம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான ஆற்றல் ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

Trending Posts