ஈரான் ஜனாதிபதி ரைசியின் உடலுக்கு இறுதிக்கிரியைகள் ஆரம்பம் – நாளை மறுதினம் நல்லடக்கம்!

முக்கிய செய்திகள் 3

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக்கிரியைகள் வடமேற்கு ஈரானில் ஆரம்பமாகியுள்ளன.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பணித்த ஹெலிகாப்டர் அஜர்பைஜான் எல்லையிலுள்ள மலைப்பகுதியில் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது.

குறித்த ஹெலிகொப்டரில் ஈரானிய ஜனாதிபதியுடன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உட்பட 9 பேர் பயணித்துள்ள நிலையில், அனைவரும் உயிரிழந்து விட்டதாக அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

அதையடுத்து ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல், தெற்கு கொராசான் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரது சொந்த ஊரான மஷாத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், தற்போது அவருடைய உடலுக்கு இறுதி சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் வடமேற்கு ஈரானிய நகரமான தப்ரிஸ் வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை நாளை மறுதினம் வியாழக்கிழமை அவருடைய உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.