வரிக்குறைப்பு செய்தால் பொருளாதாரம் பலவீனமடையும் – பதில் நிதியமைச்சர் செஹான்

சிறப்புச் செய்திகள் முக்கிய செய்திகள் 2

கோட்டபய ராஜபக்ஷ வரி குறைப்பு செய்ததால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்று குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிகட்சியினர் தமது அரசாங்கத்தில் வரி குறைப்பு செய்வதாக குறிப்பிடுவது வேட்டிக்கையாகவுள்ளது.

அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பொருளாதாரத்தை தீர்மானிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வரிச் சலுகை (வரி குறைப்பு) வழங்கியதை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சியினர் இன்று தேர்தலுக்காக வரி குறைப்பு செய்வதாக வாக்குறுதி வழங்குகிறார்கள். குறுகிய அரசியலுக்காக நாட்டு மக்களை தவறான வழிநடத்துவதை எதிர்க்கட்சிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

தமது அரசாங்கத்தில் சேர் பெறுமதி வரி மற்றும் உழைக்கும் போது செலுத்தும் வரி ஆகியவற்றை திருத்தம் செய்வதாகவும்,வரி குறைப்பு செய்வதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிடுகிறது. வரி கொள்கை முறையாக திருத்தம் செய்யப்பட்டுள்ளதால் நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது.

குறுகிய அரசியல் நோக்கத்துக்காக வரி கொள்கைகளை திருத்தம் செய்தால் நாடு மீண்டும் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.

அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார தீர்மானங்களை எடுப்பதை அரசியல் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

புதிய மத்திய வங்கி சட்டத்துக்கு அமைய மத்திய வங்கி சுயாதீனமாக செயற்படுகிறது.தமது ஆட்சியில் மத்திய வங்கி சட்டம் திருத்தம் செய்யப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிடுகிறது.

அரசாங்கத்தின் நோக்கத்துக்கு அமைய மத்திய வங்கி செயற்பட்டால் 2022 ஆம் ஆண்டின் நிலைவரமே தோற்றம் பெறும்.

நிலையான பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு அரச நிதி தொடர்பான சட்டமூலம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் தொடர்பான சட்டமூலம் இன்று பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.

அரசாங்கங்கள் மாற்றமடையும் போது பொருளாதார கொள்கைகளை மாற்றியமைப்பதை தடுக்கும் வகையில் இந்த சட்டமூலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார்.

Trending Posts