பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை இரு வாரங்களில் அறிவிப்போம் – பியல் நிஷாந்த டி சில்வா

முக்கிய செய்திகள் 2

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக களமிறக்க தீர்மானித்தால் அதற்கு முழுமையான ஆதரவு வழங்குவோம்.எமது வேட்பாளரை இன்னும் இரு வாரங்களில் அறிவிப்போம் என கடற்றொழில் வளங்கள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.

கடற்றொழில் வளங்கள் அமைச்சின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி அமைப்பதற்கு சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். கூட்டணி தொடர்பில் வெகுவிரைவில் உறுதியான தீர்மானம் எடுக்கப்படும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக களமிறக்க கட்சி மட்டத்தில் தீர்மானம் எடுத்தால் அதற்கு முழுமையாக ஆதரவு வழங்குவோம்.யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எமது ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் இருவாரங்களில் அறிவிப்போம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக கட்சி அறிவிக்குமாயி;ன் அதனை முழுமையாக வரவேற்போம்,ஏனெனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கத்தை பொறுபேற்றார்.

2022 ஆம் ஆண்டு அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை.ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனிமனிதராக அரசாங்கத்தை பொறுப்பேற்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தினால் குறுகிய காலத்தில் நாடு வழமைக்கு திரும்பியுள்ளது.ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிப்பதற்கு பொதுஜன பெரமுன தீர்மானித்தால் அதற்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.