மோட்டார் சைக்கிள்களைத் திருடி பாதாள உலக செயற்பாடுகளுக்காக விற்பனை செய்த இருவர் கைது

முக்கிய செய்திகள் 1

மோட்டார் சைக்கிள்களைத் திருடி அவற்றைப் பாதாள உலக செயற்பாடுகளுக்காக விற்பனை செய்ததாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்கள் மினுவாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் மினுவாங்கொடை, தெவலபொல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றைத் திருடித் தப்பிச் செல்ல முற்பட்ட போது மினுவாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் பல்வேறு பிரதேசங்களில் வீதியோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களைத் திருடி அவற்றைப் பாதாள உலக செயற்பாடுகளுக்காக விற்பனை செய்வதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

இதுவரை 17 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 11 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இந்த திருட்டு சம்பவத்துக்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் ஹொரணை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் இவர்கள் இருவரினால் விற்பனை செய்யப்பட்டது என பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.