அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படுவோரை முடக்குவதற்கான சட்டங்களே நாட்டில் உள்ளன! கிரியெல்ல

முக்கிய செய்திகள் 1

அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படுவோரை முடக்குவதற்கான சட்டங்களே கடந்த நான்கு ஐந்து வருடங்களாக நாட்டில் காணப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதமகொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடி தொடர்பாக நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”தமது ஆட்சிக்காலத்தில் 75 சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டதாக ஜனாதிபதி தெல்தெனியவுக்கு வருகை தந்த போது குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் சட்டமூலங்களை கொண்டு வருவதை விட அதனை நடைமுறைப்படுத்துவதே இன்றியமையாததாகும்.அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவோரை முடக்குவதற்கான சட்டங்களே கடந்த நான்கு ஐந்து வருடங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டன.

இலங்கையில் பொருளாதாரக்குற்றங்கள் இடம்பெறுவதாக கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது. அதற்கு எவரும் பதிலளிக்கவில்லை. அன்றிலிருந்து ஐக்கிய நாடுகள் சபைக்கு எவரும் செல்லவில்லை.

சர்வதேச நாணயநிதியத்துடனான மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை ஜனாதிபதியினால் நிறைவேற்ற முடியுமா என்று தெரியவில்லை.

தேர்தல்வரை சர்வதேச நாணயநிதியத்துடனான வேலைத்திட்டத்தை நீடித்து செல்வதே ஜனாதிபதியின் திட்டமாகும்.உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும் அரசாங்கம் அதனை செய்யவில்லை.தம்மிடம் நிதியில்லை என அரசாங்கம கூறுகின்றது.

எனவே தற்போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நிதியில்லை என கூறினால் என்னவாகும் என்ற கேள்வி எழுகின்றது.

நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்தாமல் நாட்டிற்கு முதலீடுகள் கிடைக்கப்பெறாது. நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசென்றவர்களால் மீண்டும் வளர்ச்சி நிலைக்கு இட்டுச் செல்லமுடியாது” இவ்வாறு எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.