‘மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன்’ – மாலத்தீவு அதிபர்

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, தொடர்ந்து 3-வது முறை இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். டெல்லியில் வரும் 9-ந்தேதி(நாளை) நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாலத்தீவுக்கான இந்திய தூதர் முனு மவாகர், இதற்கான அழைப்பிதழை முகமது முய்சுவிடம் வழங்கினார். இந்த அழைப்பை முய்சு ஏற்றுக்கொண்டார் என மாலத்தீவு அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுவதாகவும், இது இந்தியா-மாலத்தீவு இடையிலான இருதரப்பு உறவுகள் நேர்மறையான திசையில் சென்று கொண்டிருப்பதற்கான எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும் முகமது முய்சு தெரிவித்துள்ளார். அவரது இந்திய பயணம் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவின் அதிபராக முகமது முய்சு கடந்த நவம்பர் மாதம் 17-ந்தேதி பதவியேற்றார். சீனாவின் ஆதரவாளராக அறியப்படும் முகமது முய்சு, பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டிருந்த இந்திய ராணுவ படைகளை மே 10-ந்தேதிக்குள் வெளியேற உத்தரவிட்டார். இதன்படி மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டிருந்த இந்திய ராணுவ படைகள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.