சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேற்றை மாத்திரம் வெளியிடாதுள்ளமை அநீதியானது – ரிசாட் பதியுதீன்

முக்கிய செய்திகள் 1

அரசியலாட்சி அமைப்பின்படி, சட்டப்படி 112 நாட்களில் புதிய ஜனாதிபதி கதிரையில் அமர வேண்டும் எனவும் ஜனாதிபதிக்கே பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த அதிகாரம் இருக்கிறது என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

அத்தோடு, திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேற்றை மாத்திரம் வெளியிடாதுள்ளமை அநீதியானது என்றும் அவர் கூறியுள்ளார்.

திருகோணமலை சாஹிரா கல்லூரிக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (09) விஜயம் செய்த ரிசாட் பதியுதீன், அப்பாடசாலையில் உயர்தரப் பரீட்சை எழுதிய 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகாத விடயம் தொடர்பில் பாடசாலையின் அதிபர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சாஹிரா கல்லூரி மாணவர்கள் பரீட்சை எழுதிய அதே மண்டபத்தில், அதே உடை அணிந்து வேறு பாடசாலையின் முஸ்லிம் மாணவிகள் பத்து பேர் பரீட்சை எழுதியிருந்தனர். அவர்களுக்கு பெறுபேறுகள் வெளியாகின. ஆனால், சாஹிரா கல்லூரி மாணவிகளில் மாத்திரம் கண்வைத்து இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது அநீதியாகும்.

கடந்த பத்து வருடங்களாக இந்த கல்லூரியில் மருத்துவத்துறை, பொறியியல் துறைகளுக்கு அதிகமான மாணவர்கள் தெரிவாவது வழக்கம். எனவே, பரீட்சை பெறுபேறுகள் வெளியாக வேண்டும். இல்லாவிட்டால், பாராளுமன்றிலும், வெளியிலும், நீதிமன்றம் சென்றும் இம்மாணவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்போம்.

தேசிய வேட்பாளர் தொடர்பான உயர்பீட முடிவின் பிரகாரம், யாருக்கு ஆதரவு வழங்கலாம் என்ற முடிவுகளை தேர்தலின்போது அவ்வப்போது கட்சி முடிவுகளை வைத்து, தீர்மானங்களை எடுப்போம்.

எந்த தேர்தலாயினும் சரி, சில மாவட்டங்களில் தனித்தும் சில இடங்களில் இணைந்தும் போட்டியிடுவோம் என்றார்.

இந்த கலந்துரையாடலில் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.