யாழில் இடம்பெற்ற பட்டதாரிகள் போராட்டம்: மகஜர் கையளிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு முன்பாக வேலையில்லா பட்டதாரிகள் இன்று மதியம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் கட்டி அதனை சுமந்தவாறு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு செம்மணி பகுதியில் உள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு முன்பாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த போராட்டத்தின் நிறைவில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சனை போராட்டகாரர்கள் சந்தித்து  பேசி மகஜரையும் கையளித்தனர்.

ஆசிரியர் நியமனத்தின்போது பரீட்சைகளை நடாத்தாது பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகள் மகஜரில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் உயரதிகாரிகளுடன் பேசி முடிவொன்றை எட்டுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பட்டதாரிகளிடம் தெரிவித்தார்.

வேலையில்லா பட்டதாரிகள் இன்று இரண்டாம் நாளாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா சந்தித்து கலந்துரையாடினர்.