அமைச்சர் ஜீவன் தொண்டமான் அப்பட்டமாகவும் பொறுப்பற்ற விதத்திலும் நாட்டின் சட்டத்தை மீறியுள்ளதாக பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.
அண்மையில் நுவரெலியா பீட்ரு பெருந்தோட்டத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வெளிப்படுத்திய சட்டவிரோத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையை கடுமையாக கண்டிப்பதாகவும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அவர் சட்டத்தை புறக்கணிப்பதும், அச்சுறுத்தல் தந்திரங்களைப் பயன்படுத்துவதும் பெருந்தோட்ட சமூகத்தில் பெரும் கவலையையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் நீதி மற்றும் சட்டத்தின் கொள்கைகளை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், அனைத்து தொழில் பங்குதாரர்களின் பாதுகாப்பிற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நுவரெலியா பீட்ரூ தோட்டத்திற்கு பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் குழுவினர் வருவதை அறிந்த அமைச்சர் ஜீவன் தொண்டமானும் அவரது சகாக்களும் பலவந்தமாக தொழிற்சாலை வளாகத்திற்குள் நுழைந்து 4 மணிநேரம் அங்கு தங்கியிருந்ததாக பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அரசாங்கம் மற்றும் காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் கோரியுள்ளது.