
கோலாப்பூர்- மும்பை செல்லும் மகாலட்சுமி விரைவு ரயிலில் கடந்த 6- ஆம் திகதி 31 வயதான பாத்திமா என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண் பயணம் மேற்கொண்டார். அவருடன் அவரது கணவர் தயாப்பும் பயணம் செய்தார்.
ரயில் லோனாவாலா ரெயில் நிலையத்தை கடந்த போது பாத்திமாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து செய்வதறியாது கணவர் தவித்துக்கொண்டிருந்த போது பாத்திமாவுக்கு ரயிலிலேயே குழந்தை பிறந்தது.
இதையடுத்து ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில் கர்ஜத் ரயில் நிலையத்துக்கு வந்ததும் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு தாயையும், குழந்தையையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் நலமாக உள்ளனர்.
இந்த நிலையில், குழந்தை ரயிலில் பிறந்ததால் ரயிலுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், ரயிலில் பயணம் செய்த சக பயணிகள், மகாலட்சுமி கோவிலுக்கு செல்லும் போது குழந்தை பிறந்ததால் அந்த மகாலட்சுமியுடன் ஒப்பிட்டு கூறினர். இதனால் தனது மகளுக்கு மகாலட்சுமி என்று பெயரிட முடிவு செய்ததாக தயாப் தெரிவித்தார். இதையடுத்து அக்குழந்தைக்கு மகாலட்சுமி என்று பெயரிடப்பட்டுள்ளது.
கோலாப்பூர்-மும்பை மகாலட்சுமி விரைவு ரயிலில் பாத்திமா தனது மகளான மகாலட்சுமியைப் பெற்றெடுத்த சம்பவம், மத நல்லிணக்கம் மற்றும் மனித இரக்கத்தின் அழகை எடுத்துக்காட்டுகிறது.