பங்களாதேஷின் திட்டமிடல் அமைச்சின் தூதுக்குழுவினர் பாராளுமன்றத்திற்கு வருகை

முக்கிய செய்திகள் 3

பங்களாதேஷின் திட்டமிடல் அமைச்சு, மதிப்பாய்வு நடைமுறைப்படுத்தல் கண்காணித்தல் பிரிவு மற்றும் பங்களாதேஷ் மதிப்பாய்வு சமூகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தூதுக்குழுவினர் தேசிய திட்டமிடல் மற்றும் மதிப்பாய்வு பற்றிய கலந்துரையாடலை மேற்கொள்ளும் நோக்கில் இலங்கை பாராளுமன்றத்துக்கு வருகை தந்தனர்.

இவர்கள் மதிப்பாய்வுக்கான உலகப் பாராளுமன்ற உறுப்பினர்களின் மன்றத்தினுடைய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமைச் சந்தித்ததுடன், இந்தச் சந்திப்பில் மன்றத்தின் செயலாளர் மயந்த திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) காவிந்த ஜயவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மதிப்பாய்வு தொடர்பான உலகப் பாராளுமன்ற உறுப்பினர்களின் மன்றத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (07) இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் மதிப்பாய்வின் செயல்முறைகளை பயன்படுத்தி கொள்கை வகுப்பதில் பாராளுமன்றத்தின் பங்கை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

‘Eval Colombo 2018’ மாநாடு நடத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், இலங்கை பாராளுமன்றத்தில் கைச்சாத்திடப்பட்ட ‘மதிப்பாய்வு தொடர்பான கொழும்பு பிரகடனம்’ இந்நாட்டு பாராளுமன்றம் மதிப்பாய்வை நிறுவனமயப்படுத்துவதற்காக வழிகாட்டும் கட்டமைப்பாக மாறியிருப்பதுடன், இந்தப் பிரகடனத்தின் அடிப்படையில் மதிப்பாய்வை நிறுவனமயப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கபீர் ஹாசிம் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டின் அரச மற்றும் தனியார் துறைகளின் மத்தியில் மதிப்பாய்வு கலாசாரத்தை உருவாக்குவதற்கு எடுத்துள்ள முயற்சிகளுக்காக தூதுக் குழுவினர் இலங்கை அரசாங்கத்தை பாராட்டினர்.

தேசிய மதிப்பாய்வுக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தேசிய மதிப்பாய்வுக் கொள்கை நடைமுறைப்படுத்தல் கட்டமைப்பை உருவாக்கியமைக்கும் அவர்கள் தமது பாராட்டை தெரிவித்தனர்.

இந்தச் சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜும் கலந்துகொண்டிருந்தார்.