கம்பஹா,ஹொரகொல்ல பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றிற்குள் நேற்று (11) அத்துமீறி உள்நுழைந்த நபரொருவரை துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் காணியின் உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நபரொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
இவர் திருடுவதற்கு இந்த காணிக்குள் அத்துமீறி உள்நுழைந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேட்டை துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பில் காணியின் உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.