பொதுச் சுகாதார பரிசோதகரை தாக்கிய உணவக உரிமையாளர் கைது

முக்கிய செய்திகள் 1

கண்டி மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகரையும் சுகாதார பணி உதவியாளரையும் தாக்கியதாகக் கூறப்படும் கண்டி, தலதா வீதியிலுள்ள இரவு உணவகம் ஒன்றின் உரிமையாளர் உட்பட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

இந்த தாக்குதல் இன்று புதன்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.

கண்டி நகரில் ஜோர்ஜ் ஈ. டி சில்வா பூங்காவிற்கு அருகாமையில் உள்ள இரவு உணவகமொன்றிலிருந்து அகற்றப்பட்ட கழிவுகள் முறையாகப் பிரிக்கப்படாததால் அதனை முறையாக பிரித்து அப்புறப்படுத்துமாறு பொதுச் சுகாதார அதிகாரிகள் அந்த உணவகத்தின் உரிமையாளருக்கு தெரிவித்ததை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து ,தாக்குதலுக்கு உள்ளான அதிகாரிகள் இது தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

காயமடைந்த அதிகாரிகள் இருவரும் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.