சித்தார்த்தனும் – அநுரவும் விஷேட சந்திப்பு!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் நிறுத்தப்படுகின்ற பொது வேட்பாளருக்கே தாம் ஆதரவு வழங்கவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று யாழ்ப்பாணத்திலுள்ள சித்தார்த்தன் எம்.பி.,யின் கந்தரோடை இல்லத்தில் நேற்று(11) இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றிருந்த இந்த சந்திப்பில், தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவாக்கல் தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டினை தமிழ் மக்களுக்கு, ஜேவிபி அறிவிக்கவேண்டும் என தர்மலிங்கம் சித்தார்த்தன் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், வடக்கு, கிழக்கை நீதிமன்றத்தினூடாக தனித்தனி மாகாணங்களாக பிரிப்பதற்கு பிரதான பங்காளியாக ஜே.வி.பி கட்சி செயற்பட்ட விடயத்தில், தம் மக்கள் இன்று வரை அதிருப்தியடைந்துள்ளதாகவும், இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி தனது உறுதியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் பட்சத்தில், தமிழ் மக்களது மனநிலையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நியமிப்பதற்கு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கின்ற ஐந்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சமூக மட்ட அமைப்புக்களும் அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதாகவும், தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக தாம் முழுமையாக அவருடனேயே செயற்படுவோம் என்பதையும் சித்தார்த்தன் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் காணப்படும் பிந்திய நிலைமைகள் பற்றி அங்கு கலந்துரையாடப்பட்டதோடு, எதிர்காலத்திலும் தொடர்ந்து சந்திப்புக்களை மேற்கொள்ள இரு தரப்பிலும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.