முழு நாட்டுக்கும் ஒரே சட்டம்: மரிக்கார்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

நாட்டில் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஜக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் யாழில் தெரிவித்திருந்த நிலையில் கட்சிக்குள் மாறுபட்ட நிலைப்பாடு வெளியிடப்பட்டுள்ளது.

இரான் விக்கிரமரட்ண அதனை ஆமோதித்திருந்த போதும் ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அதனை நிராகரித்துள்ளார்.

இது குறித்து மரிக்கார் தெரிவித்துள்ளதாவது ” வடக்குக்கு ஒரு சட்டமும், தெற்குக்கு ஒரு சட்டமும் ஒரு நாட்டில் இருக்க முடியாது. மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படவேண்டும் என சஜித் பிரேமதாச கூறவில்லை.

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் போது சமூக மற்றும் சுற்றாடல் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அதனையே குறிப்பிட்டிருந்தார்.

மாறாக பொலிஸ் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படவேண்டும் என அவர் கூறவில்லை. வடக்குக்கு ஒரு சட்டமும் தெற்குக்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது.
முழு நாட்டுக்கும் ஒரே சட்டம் என்ற ரீதியில் தமிழ் மக்களுக்கான நியாயத்தை வழங்கவேண்டும் என்றே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டிருந்தார்.

பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் பெரும்பாலானவை மாகாண சபைகளுக்கே வழங்கப்பட்டுள்ளன. உள்ளூராட்சி நிறுவனங்கள் அனைத்தும் கூட மாகாணசபைகளின் கீழேயே உள்ளன.

சஜித் கூறியதன் அர்த்தமும் இதுவே. அதனை விடுத்து பொலிஸ் அதிகாரம் முற்றாக வழங்கப்படும் என்பதல்ல. பொலிஸ் மற்றும் சுற்றாடல் பொலிஸ் என்பவற்றை வழங்குவதில் சிக்கல் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவரிடம் நான் இதைக் கேட்கவில்லை. வடக்கு மக்களுக்கு நியாயம் வழங்கப்படவேண்டும். வடக்கு மாணவர்களுக்கும் தெற்கிலுள்ள மாணவர்களைப் போன்றே கல்வி கற்பதற்கு உரிமையுள்ளது.

வடக்கு மக்களுக்கும் இலங்கை பிரஜைகள் என்ற ரீதியில் ஏனைய மக்கள் அனுபவிக்கும் சகல வசதிகளையும் அனுபவிப்பதற்கான உரிமை உள்ளது. ஆனால் அவற்றை எமது நாட்டு அரசாங்கங்கள் வழங்கவில்லை.

ஐ.தே.க அரசாங்கமோ, பொதுஜன பெரமுன அரசாங்கமோ அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. எனவே தான் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” இவ்வாறு எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.