தாமரை பறிக்கச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு!

முக்கிய செய்திகள் 1

தாமரைப்பூ பறிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றுள்ளது.

ஆயித்தியமலை மகாவித்தியாலயத்தில் தரம் - 4 இல் கல்வி கற்ற கொவிப்பொல வீதியைச் சேர்ந்த மதீஷ தேனுவன் (வயது - 9) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது,

குறித்த சிறுவன் பாடசாலை முடிவடைந்து தனது நண்பர்கள் மூவருடன் தாமரை பறிப்பதற்காக குறித்த ஏரிக்குச் சென்ற போது வறட்சி காலத்தில் தண்ணீர் எடுப்பதற்காக ஏரியின் நடுவே வெட்டப்பட்ட கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார்.

சிறுவனுடன் வந்த நண்பர்கள் இச்சம்பவம் தொடர்பில் எவருக்கும் தெரிவிக்காத நிலையில் மாலை 5.45 மணி வரை சிறுவன் வீட்டிற்கு வராததால் சிறுவனின் தந்தை சிறுவனைத் தேடியுள்ளார்.

அதன்போது சிறுவன் ஏரியை நோக்கிச் சென்றதைக் கண்டதாக அக்கம் பக்கத்தவர்கள் தெரிவித்ததையடுத்து அங்கு சென்று பார்த்தபோது சிறுவன் ஏரியின் நடுவிலுள்ள கிணற்றில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர்கள் சிறுவனைக் கிணற்றிலிருந்து மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவனை உடனடியாக ஆயித்தியமலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.