
சில அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. அது பாரம்பரியமாக தொடரும் நிலை அல்ல. எனவே சட்டமா அதிபர் மற்றும் பாதுகாப்பு படைத்தளபதிகளின் சேவை கால நீடிப்பு தொடர்பில் தவறான புரிதல்களைத் தவிர்த்துக்கொளுமாறு அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
புதன்கிழமை (12) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சட்டமா அதிபர் மற்றும் பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஆகியோரின் சேவை நீடிப்பு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்குபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசியலமைப்பிற்கமைய ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்தலுக்காக வரவு செலவு திட்டத்தின் ஊடாக பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் அவசரமாக புதிய அதிகாரிகளை நியமித்து, இதுவரை மேற்கொண்ட கடமைகளை தொடர்ச்சியாக கொண்டு செல்ல முடியாது. சில அத்தியாவசிய சேவைகளில் சிக்கல்கள் ஏற்படாமல் இருப்பதைத் தடுக்க விசேட நிபந்தனைகளின் கீழ் சேவை நீட்டிப்புகளை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.