கதிர்காம காட்டுப்பாதை திறக்கும் திகதியில் மாற்றம் : குழப்பத்தில் யாத்திரிகர்கள்!

முக்கிய செய்திகள் 1

கதிர்காமம் ஆலயத்தின் ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆலயம் நோக்கிய பாத யாத்திரையினை மக்கள் தற்போது ஆரம்பித்துள்ளனர்.

எதிர்வரும் 30ஆம் திகதி லாகுகல பிரதேச செயலாளர் பகுதியில் அமைந்துள்ள உகந்தை காட்டுப்பாதை பக்தர்களுக்காக திறக்கப்பட்டு, ஜூலை 11ஆம் திகதி மூடப்படுவதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (07) உகந்தை முருகன் ஆலயத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து, கதிர்காமம் ஆலயத்தில் கடந்த 10ஆம் திகதி நடத்தப்பட்ட கூட்டத்தில் உகந்தை காட்டுப்பாதை திறக்கும் திகதி பிற்போடப்பட்டு, எதிர்வரும் ஜூலை மாதம் 02ஆம் திகதி காட்டுப்பாதை திறக்கப்பட்டு, 14ஆம் திகதி மூடப்படவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட சேவற்கொடியோன் அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னர் அறிவிக்கப்பட்டபடி, 30ஆம் திகதியினை கருத்திற்கொண்டு பக்தர்கள் பாதயாத்திரை செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட நிலையில், இந்த திகதி மாற்றமானது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளதாக சமூக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

காட்டு வழியாக பாதயாத்திரை மேற்கொள்ள தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கால எல்லை போதாமல் உள்ளதாகவும் சமூக அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் 2024.07.06 அன்று கதிர்காம கொடியேற்றம் நடைபெற்று, 22ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் கதிர்காமம் ஆலய உற்சவம் நிறைவடைகிறது.

காட்டுப்பாதை திகதி மாற்றங்கள் தொடர்பில் லாகுகலை பிரதேச செயலாளர் நவேந்திரராஜா நவநீதராஜா கருத்து தெரிவிக்கையில், கதிர்காம உற்சவம் தொடர்பான கூட்டங்கள் மூன்று கட்டமாக இடம்பெறும் என குறிப்பிட்டார்.

அதன்படி, முதலாம் கட்ட கூட்டமானது கதிர்காமத்தில் இடம்பெறும் எனவும் இதன்போது தெரிவிக்கப்படும் கால எல்லைக்குள் காட்டுப்பாதை திறந்து மூடப்படும் கால எல்லை மற்றும் ஏனைய விடயங்கள் தீர்மானிக்கப்படும்.

அதன் பின்னர், அம்பாறை மாவட்ட ஆரம்ப கட்ட கூட்டம் உகந்தையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடத்தப்பட்டு கதிர்காமத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டு கருத்துக்கள் பெறப்படும். மூன்றாம் கட்டமாக, உகந்தையில் விளக்கமளிக்கப்பட்ட முடிவுகள் கதிர்காமத்தில் இடம்பெறும் இரண்டாம் கட்ட இறுதிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர், இவ்வருடத்துக்கான இறுதி முடிவுக்கான கூட்டம் கடந்த 10ஆம் திகதி கதிர்காமத்தில் நடத்தப்பட்டபோது, பாதயாத்திரைக்கான உகந்தை காட்டுப்பாதை எதிர்வரும் ஜூலை மாதம் 02ஆம் திகதி திறக்கப்பட்டு, ஜூலை 14ஆம் திகதி பூட்டப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லாகுகல பிரதேச செயலாளர் தெரிவித்தார்.