அட்டன் புதிய ரயில் நிலைய கட்டிட தொகுதி விரைவில் பொது மக்கள் பாவனைக்கு!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரத்தினால் 2017 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட அட்டன் புதிய ரயில் நிலையக் கட்டிடத் தொகுதி விரைவில் பொது மக்கள் பாவனைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இவ்விடயம் தொடர்பான கள ஆய்வு ஒன்றினை பொருளாதார அபிவிருத்தி பாராளுமன்ற கண்காணிப்பு குழுவின்  பாராளுமன்ற உறுப்பினர்  அஜித் மனப்பெரும நேற்று வியாழக்கிழமை (13) அட்டன் ரயில் நிலையத்திற்கு வருகைத் தந்திருந்தார்.

இதன்போது, கள ஆய்வினை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் முதற்கட்டமாக புதிய ரயில் நிலையத்தினை வெகு விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ரயில்வே திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கு ஏற்ப அவரின் பாராளுமன்ற ஆய்வாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் ,அட்டன் -டிக்கோயா நகர சபையின் முன்னாள் தலைவர் டாக்டர் அழகுமுத்து நந்தகுமார் ஆகியோரும் பங்கேற்றனர். 

நல்லாட்சி அரசாங்கத்தில் 40 கோடி ரூபாய் பெறுமதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத் திட்டம் 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து முன்னெடுக்கப்பட வில்லை. 

இந்த நிலையில் புதிய ரயில்வே கட்டிடத் தொகுதியை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சில வேலைத்திட்டங்களை விரைவில் முடிப்பதற்கு ரயில்வே திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, சந்தைக் கட்டிடத் தொகுதியில் புதிய நிர்மாணப்பணிகளை மேற்கொள்வதற்கு தனியாரின் ஒத்துழைப்பையும் பெறுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், இதுவரை காலமும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பில் இருந்த ஹட்டன் ரயில்வே புதிய கட்டிடத் தொகுதியின் பொறுப்புகள் அனைத்தும் இன்று முதல் ரயில்வே திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts