தூங்கிக் கொண்டிருந்த ஒரு மாத குழந்தை வாளியில் சடலமாக மீட்பு!

இந்தியச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை கிராமத்தில் பிறந்து 38 நாட்களே ஆன ஆண் குழந்தை துணியில் சுற்றப்பட்ட நிலையில் வாளியில் கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு - அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை கிராமம் வடக்கு வெள்ளாள பிரிவைச் சேர்ந்த வீரமுத்து (65) என்பவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் சங்கீதாவை (30), அருகில் உள்ள சுந்தர பெருமாள் கோயில் கிராமத்தில் பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து ஓர் ஆண்டுகள் ஆன நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்து 38 நாட்கள் ஆன நிலையில், இன்று காலையில் குழந்தையின் எந்த சத்தமும் இல்லாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென எழுந்து வந்த சங்கீதாவின் கணவர், உறங்கிக் கொண்டிருந்த சங்கீதாவை எழுப்பி குழந்தையைக் காணவில்லை, குழந்தை எங்கே என கேட்டுள்ளார். உடனே அருகிலுள்ள அறையில் உறங்கிக் கொண்டிருந்த சங்கீதாவின் அம்மாவை எழுப்பி குழந்தையை காணவில்லை எனக் கூறி, அனைவரும் குழந்தையைத் தேடி உள்ளனர்.

அப்போது, தோட்டத்தின் குளியலறையில் உள்ள பிளாஸ்டிக் வாளியில் குழந்தையின் உடல் துணியால் சுற்றப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. சந்தேகப்பட்டு எடுத்து பார்த்தபோது, குழந்தை இறந்த நிலையில் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் பொலிசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார், இறந்த குழந்தையைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், குழந்தை எப்படி இறந்தது, வீட்டில் உள்ளவர்களே குழந்தையைக் கொன்றார்களா அல்லது வேறு யாரேனும் குழந்தையைக் கொன்று இங்கு வைத்துச் சென்றார்களா என பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.