இத்தாலி நாடாளுமன்றத்தில் மந்திரி மீது தாக்குதல் முயற்சி: எம்.பி.க்கள் கைகலப்பில் ஒருவர் படுகாயம்

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

ஐரோப்பிய நாடான இத்தாலியில் பிரதமர் ஜார்ஜியா மெலானி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்குவது குறித்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

இந்த மசோதாவை ஆதரித்து பிராந்திய விவகாரங்கள் துறை மந்திரி ராபர்டோ கால்டெரசி பேசினார். அப்போது நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் என கூறி இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் மசோதாவை கைவிட வேண்டும் என கோரி அவர்கள் கத்தி கூச்சலிட்டனர். இந்தநிலையில் எதிர்க்கட்சி எம்.பி.யான லியானார்டோ டோனோ தேசியக்கொடியால் ராபர்டோ கால்டெரசியின் கழுத்தை இறுக்கி தாக்குதல் நடத்த முயன்றார். இதனை பார்த்த ஆளுங்கட்சி எம்.பி.க்கள் லியானார்டோவை பிடித்து இழுத்தனர். அப்போது இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. எனவே ஒருவரையொருவர் மாறிமாறி தாக்கிக்கொண்டனர்.

இதில் எதிர்க்கட்சி எம்.பி. ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்த பாதுகாவலர்கள் மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடைபெற்ற சம்பவம் அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இத்தாலியில் உலக நாடுகள் பங்கேற்கும் ஜி-7 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையே ஏற்பட்ட மோதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.