சர்வதேச அளவில் அமெரிக்க டொலரின் ஆதிக்கத்தில் சரிவு!

செய்திகள் முக்கிய செய்திகள் 3

உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்கள் வெளிநாட்டு நாணய கையிருப்புகளுக்காக அமெரிக்க டொலர்களை மட்டும் பயன்படுத்தாமல், ஏனைய மாற்று நாணயங்களையும் பயன்படுத்துவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையை சர்வதேச அளவில் அமெரிக்க டொலரின் ஆதிக்கத்தின் சரிவு என்று கூறலாம் என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச அளவில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட நான்கு நாணயங்களில், அமெரிக்க டொலர், யூரோ, ஜப்பானிய யென் மற்றும் பிரிட்டிஷ் ஸ்டெர்லிங் பவுண்ட் ஆகியன உள்ளன.

கடந்த இரண்டு தசாப்தங்களாக, யூரோ, யென் மற்றும் ஸ்டெர்லிங் பவுண்ட் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு இருப்புக்களுக்கான அமெரிக்க டொலரின் பயன்பாடு குறைந்துள்ளது.

அத்துடன், புதிய மாற்று நாணயங்களாக அவுஸ்திரேலிய டொலர், கனேடிய டொலர், சீன யுவான், தென்கொரிய வொன் மற்றும் சிங்கப்பூர் டொலர் மற்றும் சுவீடன், நோர்வே போன்ற நோர்டிக் நாடுகளின் நாணயங்கள், உலகின் மத்திய வங்கிகள் தங்கள் வெளிநாட்டு இருப்புக்களை வலுப்படுத்த அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. 

வெளிநாட்டு கையிருப்பில் பாரம்பரியமற்ற நாணயங்கள் சேர்க்கப்பட்டாலும், உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்க டொலர்தான் மிகவும் சக்திவாய்ந்த நாணயமாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.