
பெருந்தோட்டப் பகுதிகளில் நெடுங்குடியிருப்புகளில் வசித்து வரும் மக்களுக்குக் காணிகளை வழங்கி அவர்களைச் சிறுதோட்ட உரிமையாளராக்குவதே தமது நோக்கமாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் 290ஆவது கட்டமாக அவிசாவளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கிக் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்ட மக்கள் நெடுங்குடியிருப்பில் தொழிலாளர்களாகத் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் காலம் நெருங்கும்போது அவர்களது வேதனத்தை 1,000 ரூபாய் முதல் 2,500 ரூபாவாக அதிகரித்து தருவதாகப் பலரும் வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர்.
நாட்டில் அரச மற்றும் தனியார் பொருந்தோட்டத் துறையில் விளைச்சல் மேற்கொள்ளப்படாத பெருமளவான நிலப்பரப்பு காணப்படுகின்றது.
தேயிலை உற்பத்திக்கு 60 முதல் 70 சதவீத பங்களிப்புகள் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாலேயே வழங்கப்பட்டு வருகின்றன.
அவர்களிடம் 40 சதவீதத்துக்கும் குறைந்த அளவு நிலமே காணப்படுகிறது.
அத்துடன் 60 சதவீதத்துக்கும் அதிக நில உரிமையைக் கொண்டுள்ள பெருந்தோட்ட நிறுவனங்கள் தேசிய உற்பத்திக்கு 30 சதவீத பங்களிப்பையே வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.