சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமாயின், வெட் வரியை உயர்த்த வேண்டும்- வஜிர

முக்கிய செய்திகள் 2

தேர்தலில் வெற்றிபெற முடியாத சில தரப்பினர் நாட்டின் ஸ்திர நிலையை சீர்குலைக்கும் வேலைநிறுத்தங்களை ஆரம்பித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

எந்தெந்தக் குழுக்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகின்றன என்பதை மக்கள் அடையாளம் காண வேண்டும் எனவும், மக்கள் மீண்டும் தவறு செய்தால், அதனை மாற்றியமைக்க முடியாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன,

சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் நாட்டுக்காக அதிகபட்ச பணிகளைச் செய்தது என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் பலவீனங்களும் இருந்தன. எவ்வாறாயினும், சுதந்திரத்தின் பின்னர் தொடர்ச்சியாக இருந்த ஆட்சியின் பலவீனங்களைத் தீர்க்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

உதாரணமாக, அரசியலமைப்பின் 27 மற்றும் 28 ஆவது பிரிவுகளில் அரச கொள்கையை வழிநடத்தும் கோட்பாடுகள் மற்றும் அடிப்படைக் கடமைகள் என்பன குறிப்பிடுகின்றன. இது பொதுமக்களுக்கு எப்படி உரிமைகளை வழங்குவது என்பது பற்றியது.

எவ்வாறாயினும், 27 மற்றும் 28 இல் எவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தாலும், 29 ஆவது பிரிவில் எந்தப் பொறுப்புக் கூறலும் ஏற்படாமலும் ஜனநாயக அரசியலைப் பாதுகாக்க சட்டத்தால் எந்த உரிமைகளும் ஒதுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி, எந்த நீதிமன்றமோ அல்லது நீதிபதியோ, அரசியல்வாதிகளினால் கூறப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது,

இந்த நிலைமையில்தான் நாட்டின் அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நாட்டை காலாகாலமாக வீழ்ச்சியடையச் செய்து வருகின்றன.

இந்நிலையை மாற்றியமைக்க வேண்டியதன் காரணமாக தற்போதைய ஜனாதிபதி, அரசியலமைப்பின் 27, 28 மற்றும் 29 ஆகிய பிரிவுகளை பொறுப்புக் கூறக்கூடிய வகையில் பொருளாதார மாற்ற சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். 165 பக்கங்களைக் கொண்ட இந்த சட்ட மூலம் இரண்டு கோடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 148, 149, 150, 151, 152 ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பொதுமக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினரின் முக்கிய பொறுப்பு அரச நிதி தொடர்பான பொறுப்பாகும்.

அரசியல் கட்சிகள் அவ்வப்போது வெளியிடும் பொய்யான அறிக்கைகளால் அந்த நிதிப் பொறுப்பு வலுவிழக்கிறது. அந்த நிலையைத் தடுக்கும் வகையில், அரசியல் கட்சிகள் கூறுகின்ற விடயங்களின் உண்மை நிலையை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக வரவு செலவுத்திட்ட அலுவலக சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன் நின்றுவிடாமல், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பில் உள்ள அந்தப் பிரிவை பலப்படுத்தும் வகையில் பொருளாதார பரிமாற்ற சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதன்படி அரசியல் கட்சிகளின் பொய்களைக் கூறும் சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2021 ஜூன் 23 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்த பின்னர், நாடு வீழ்ச்சியடைந்து வருகிறது, நாம் கவனமாக செயல்பட வேண்டும் என்று கூறினார். மேலும், விரைவில் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் நாடு செல்லும் பாதையை மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆனால் அதை அப்போதைய ஆட்சியாளர்கள் நிறைவேற்றாததால் இறுதியில் அந்த ஆட்சி செயலற்றுப் போனது.

அதன்பின்னர், 2022 மே மாதம் 12 ஆம் திகதி, பாராளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனத்தை மட்டுமே வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதமராகப் பதவியேற்றார். பின்னர், அரசியலமைப்பின் படி, ஜூலை 20 ஆம் திகதி, பாராளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவுடன், அவர் 134 வாக்குகளைப் பெற்று, எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அத்துடன், இரண்டு வருடங்களுக்கு முன்னர் வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டைப் பொறுப்பேற்ற ஜனாதிபதி,சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்தார். ஆனாலும் இந்தப் பிரச்சினை இன்னும் முடிந்துவிடவில்லை. தற்போது வெளிநாட்டுக் கடனை அடைக்க 2027 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சுமார் 500 கோடி டொலர்கள் வெளிநாட்டுக் கையிருப்பு உள்ளது. இலங்கைப் மக்களுக்கு வாழ்வளித்து, அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களை ஆரம்பித்து நாட்டைக் கட்டியெழுப்பும் இலக்குகளை பொருளாதார பரிமாற்றச் சட்டம் வழங்கியுள்ளது. அதன்படி, 2027 ஆம் ஆண்டுக்குள் பொருளாதார வளர்ச்சி 5% என்ற இலக்கில் பேணப்பட வேண்டும் என்று சட்டம் நிர்ணயித்துள்ளது.

இத்துடன் நின்றுவிடாமல் ஜனாதிபதி, 2030ஆம் ஆண்டிலும், 2042ஆம் ஆண்டிலும் யார் நாட்டை ஆட்சி செய்தாலும் அந்த அரசியல் கட்சிகளின் பொறுப்பு, சட்டமாக்கப்பட்டுள்ளது. மேலும் நாம் கவனமாக செயற்பட வேண்டியுள்ளது. யாரேனும் இம்முறை நாட்டை தவறின் பக்கம் தள்ளினால் நாம் அவர்கள் யார் என்பதை அடையாளம் காண வேண்டும். உதாரணமாக, பொய் கூறுபவர்களின் பட்டியல் ஒன்றை கிராமத்தில் காட்சிப்படுத்த வேண்டும். பொதுமக்களை ஏமாற்றும் குழுக்களையும், பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் குழுக்களையும் பொதுமக்கள் அடையாளம் காண வேண்டும்.

இந்த முறை மீண்டும் ஒரு தவறை செய்தால், அந்தத் தவறை மீண்டும் மாற்ற முடியாத கடுமையான தவறாகிவிடும். எனவே, நாம் இப்போது மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். அவ்வாறென்றால், நாட்டிற்கு ஆட்சியாளர்களை நியமிக்கும் போது இலங்கை மக்கள் சிந்திக்க வேண்டிய ஒரு விடயம் உள்ளது. அடுத்த ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு யாராவது இருந்தால், அவர் எந்த வகையில் பொருத்தமானவர் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். எனவே, இந்நேரத்தில் பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டியுள்ளது.

தற்போது சில தரப்பினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் வெற்றி பெற முடியாததால், அவர்களின் தனிப்பிட்ட வெற்றிக்காக நாட்டை சீர்குலைக்க தயாராகி வருகின்றனர்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் கோரும் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டுமாயின் 18% வெட் வரி 21% ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதனால், உழைக்கும் மக்களின் தேநீர் கோப்பையினதும், அரிசி பொட்டலத்தி னதும் விலைகள் அதிகரிக்கும். அவ்வாறு நடந்தால், வங்குரோத்தான நாடு மீண்டும் அதனை விட ஆபத்தான நிலைக்குச் செல்வதைத் தடுக்க முடியாது. இலங்கை மக்கள் அனைவரும் இதற்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என்றும் நம்புகிறோம்” என்றும் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.