இலங்கை மாணவர்களுக்கான விசாவை 4 வருடங்களுக்கு அதிகரிக்குமாறு வேண்டுகோள்!

முக்கிய செய்திகள் 3

மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மலேசியா உயர் கல்வி அமைச்சர் ஷாம்ப்ரி அப்துல் காதிரை சந்தித்து இலங்கைக்கும் மலேசியாவுக்குமான கூட்டுத்திட்டம் குறித்து கலந்துரையாடினார்.

மலேசியாவில் உயர்கல்வி கற்கும் 3800 யிற்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் தற்போதைய சட்டத்தின் படி ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் இலங்கைக்கு திரும்பி விசாவைப் புதுப்பிக்கும் நிலை காணப்படுகிறது.

ஆதலால் அவர்களின் பட்டப்படிப்பை நிறைவு செய்யும் காலமான 4 வருடங்களுக்கு விசா காலத்தை அதிகரித்து தருமாறு மலேசியா உயர் கல்வி அமைச்சர் ஷாம்ப்ரி அப்துல் காதிரிடம் ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார். ஆளுநரின் வேண்டுகோளுக்கு இணங்க அமைச்சர் அதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் இருந்து மலேசியாவிற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு மலாய் மொழிக்கான பயிற்சியை இலங்கையில் ஆரம்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், மலேசியாவிற்கும் இலங்கைக்குமான கல்வி தொடர்பான கூட்டு பரிமாற்ற திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் முருகன் மற்றும் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் சுமங்கல டயஸ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.