நானுஓயா புகையிரத நிலையம் வெறிச்சோடியது: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அவதி!

முக்கிய செய்திகள் 2

நாடளாவிய ரீதியில் நேற்று (9) நள்ளிரவு முதல் புகையிரத நிலைய அதிபர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நானுஓயா புகையிரத நிலையமும் மூடப்பட்டு, அங்கே இராணுவத்தினரும் அதிகமான பொலிஸாரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், புகையிரத நிலையம் பயணிகளின் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

புகையிரத நிலைய அதிபர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ரயில் பயணிகள் மிகுந்த சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, அதிகமான சுற்றுலாப் பயணிகள் நானுஓயா புகையிரத நிலையத்துக்கு வருகை தந்து, மீண்டும் திரும்பிச் செல்கின்றனர். இதனால் நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுற்றித் திரிந்து பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.

தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நேற்று பிற்பகல் 12:45க்கு கொழும்பிலிருந்து நானுஓயா நோக்கி புறப்பட்டுச் சென்ற புகையிரதம் ஒன்று நானுஓயா புகையிரத நிலையத்தில் சேவைகளை இரத்து செய்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனினும், பணிப்புறக்கணிப்புக்களை ஆரம்பிக்கும்போது, பொது மக்களின் நலன் கருதி, பயணிகளை பாதிக்காத வகையில் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் எனவும் திடீரென்று தீர்மானம் எடுக்க வேண்டாம் எனவும் இந்த தொழிற்சங்க போராட்டம் முன்கூட்டியே அறிவித்திருந்தால், ரயில் பயணங்களை தவிர்த்து தாங்கள் வீடுகளிலேயே தங்கியிருந்திருக்கலாம் அல்லது வேறு பொதுப் போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்திருக்கலாம் என்றும் இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கத்தின் மீதும் தொழிற்சங்கங்கள் மீதும் பொது மக்களுக்கு அதிருப்தி ஏற்படுவதாகவும் பலர் குற்றம் சுமத்துகின்றனர்.