சஜித்தின் தேர்தல் கூட்டணியை ஆகஸ்ட்டில் அறிவிக்க தீர்மானம்

முக்கிய செய்திகள் 2

உத்தேச ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தியை தலைமைத்துவமாக கொண்ட அரசியல் கூட்டணி எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

கொழும்பில் பெரும் மாநாட்டை நடத்தி இந்த அறிவிப்பு விடுக்கப்படவுள்ளதுடன், அதற்கான ஏற்பாடுகள் அனைத்து மட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமைத்துவமாக கொண்டு பரந்துபட்ட அரசியல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் முடிவுற்றுள்ளது. உத்தேச ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் மாதத்தில் வெளிப்படுத்தப்படவுள்ளது.

தமிழ் மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளடங்கலாக இந்த எதிர்க்கட்சியின் கூட்டணி அமையப்பெற்றுள்ளது.

எந்தந்த கட்சி மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் இணைந்துள்ளார்கள் என்பதை தற்போது கூற இயலாது என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, உரிய திகதி நெருங்குகையில் அரசியல் கூட்டணி குறித்த முழுமையான தகவல்கள் வெளிப்படுத்தப்படும் என்று வீரகேசரிக்கு கூறினார்.

எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறிய டளஸ் அழகப்பெரும, ஜீ.எல். பீரிஸ் மற்றும் விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

அதே போன்று சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களான பழனி திகாம்பரம், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், மனோ கணேசன் மற்றும் இராதாகிருஷ்ணன் உட்பட பலர் ஏற்கனவே சஜித் தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளனர்.

மறுபுறம் பாட்டலி சம்பிக்க ரணவக, சரத் பொன்சேகா மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி தனத்து செயற்படுகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையிலேயே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியை தலைமைத்துவமாக கொண்ட கூட்டணியை அறிவிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts