
மொரட்டுவை, லக்ஷபதிய ரத்துகுருஸ்ஸ வத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (15) திங்கட்கிழமை அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர்.
“ பொடி அய்யா ” என அழைக்கப்படும் ஹரேந்து குமார என்ற 41 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் பிரதேவாசிகளுக்கு இந்த வீட்டில் நபரொருவர் கூச்சலிடும் சத்தம் கேட்டுள்ளது.
பின்னர், சிறுது நேரம் கழித்து கொலை செய்யப்பட்டவரது மனைவி தனது கை,கால்களில் கட்டப்பட்டுள்ள கயிறுகளை கழற்றிவிட்டு அயல் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவருக்கு தொலைபேசி ஊடாக அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த தொலைபேசி அழைப்பை பெற்றுக்கொண்ட அயல் வீட்டில் வசிக்கும் பெண் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, கொலை செய்யப்பட்டவரது மனைவி பிரதேசவாசிகளின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.