
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் எண்ட்ரூ பிளின்டொப்பின் 16 வயது மகன் ராக்கி பிளின்டொஃப், இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்காக சதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
181 பந்துகளில் 106 ஓட்டங்களை பெற்று அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதில் ஒன்பது நான்கு ஓட்டங்கள் மற்றும் இரண்டு ஆறு ஓட்டங்கள் அடங்கியிருந்தன.
போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்தின் 19 வயதுக்கு உட்பட்ட அணி, 477 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
4 நாட்கள் கொண்ட போட்டியில் மூன்றாவது நாள் நிறைவின் போது தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பில் மஹின் பெரேரா 61 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுள்ளார்.
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்காக இலங்கை அணி இன்னும் 78 ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது.