
அரசியலமைப்பில் காணப்படுகின்ற மாகாண சபை முறைமையை மீண்டும் முன்னெடுப்பதற்கு ஆட்சிப்பொறுப்பையேற்று சொற்பகாலத்துக்குள் நடவடிக்கைகளை முன்னெடுப்போம். எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அம்முறைமை உள்ளடக்கப்பட்டுள்ளது என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
யாழ்.வணிகர் கழகத்துக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோதே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பு தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளதாவதுரூபவ் யாழ்.வணிகர் கழகத்துடனான சந்தப்பின்போது, நாம் எமது பொருளாதாரக் கொள்கைகளை வெளிப்படுத்தினோம்.
விசேடமாக நாட்டின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தல் உள்நாட்டு உற்பத்திகளை அதிகரித்தல், அனைவரையும் பொருளாதார மீள்கட்டியெழும்பும் செயற்றிட்டத்தில் பங்காளிகளாக்குதல் உள்ளிட்டவற்றை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தினோம்.அதனையடுத்து தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமான உரையாடல்கள் நடைபெற்றன. தேசிய இனப்பிரச்சினை தொடர்பான எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினோம்.
குறிப்பாக, அரசியலமைப்பில் உள்ள மாகாண சபை முறைமையை நாம் ஆட்சிப்பொறுப்பேற்று சொற்பகாலத்துக்குள் வினைத்திறனுடன் மீளச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்பதை தெரிவித்தோம்.
அத்துடன் மாகாண சபைகள் முறைமை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமையையும் சுட்டிக்காட்டினேம். எவ்வாறாயினும் நாட்டின் தேசிய பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாகவே தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது.
அந்த அரசியலமைப்பானது அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும். அதன்மூலமாகவே மீண்டும் இனரீதியான குழப்பநிலைமைகள் உருவெடுக்காது என்பதோடு சமத்துவமும் உறுதியாகும் என்ற விடயத்தினை அவர்களிடத்தில் குறிப்பிட்டோம்.
இதனையடுத்து 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தல் தொடர்பில் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு நடவடிக்ககைளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வணிகர் கழகத்தால் எம்மிடத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பில் ஏனைய தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானத்தினை எடுப்போம் என்று பதிலளித்துள்ளோம் என்றார்.