நாம் யாருக்கும் முகவர்களாகவோ, சுயநலத்துக்காகவோ சோரம்போனதில்லை. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனித்துவமான செயற்பாட்டைக் கொண்ட கட்சியாகும் என கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர் நடைபேறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சிறீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரை களமிறக்கவுள்ளதால் தங்களது கட்சியின் தங்களது நிலைப்பாடு என்ன என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்ற அரசியல் இலக்குடன் இணக்க அரசியலினூடாக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக மக்கள் செவையாற்றி வருகின்றார். அவர் 30 ஆண்டுகாலமாக தொடர்ச்சியாக நாடாளுமன்றில் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு அங்கம் வகித்துவருகின்றார்.
இதில் ஜனாதிபதிகளாக சந்திரிகா அம்மையாரது ஆட்சிக்காலத்திலும், அதன்பின்னர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலும் பின்னர் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலும் தற்போது ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்திலும் அமைச்சராகவே இருக்கின்றார்.
தமிழ் மக்களின் அன்றாடப்பிரச்சினை அபிவிருத்தி அரசியலுரிமை ஆகியவற்றை நோக்காகக் கொண்டு ஈ.பிடி.பி தனித்துவமான முடிவுகளை மக்கள் நலன்சார்ந்து தேர்ந்தெடுத்து தனது அரசியல் வழிகாட்டல்களை மக்களுக்கு வழங்கிவருகின்றது.
இத்தேர்தலில் தென்னிலங்கையை சேர்ந்த பல ஜனாதிபதி வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டாலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆதரிப்பதில் வெளிப்படையாகவே அறிவித்துள்ளது.
எனவே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தமிழ் மக்களின் நலன்சார்ந்து முடிவுகளை எடுக்குமே தவிர எவரது முகவர்களாகவும் செயற்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.