விமான பணிப்பெண்ணின் கையை பிடித்து தகாத வார்த்தைகளால் திட்டிய பயணி கைது!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

குவைத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த விமானமொன்றில் சேவையாற்றிய பணிப்பெண் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படும் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் இன்று (30) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குவைத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானச் சேவைக்குச் சொந்தமான U.L - 230 என்ற விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபரொருவராவார். 

சந்தேக நபர் குறித்த விமானத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது அதே விமானத்தில் சேவையாற்றிய பணிப்பெண் ஒருவரின் கையை இறுக்கிப் பிடித்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பணிப்பெண் இது தொடர்பில் விமானக் குழுவிடம் தகவல் வழங்கியுள்ளார்.

பின்னர், விமானக் குழு இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் தகவல் வழங்கியதையடுத்து சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் மனைவி இது தொடர்பில் தெரிவிக்கையில், 

எனது கணவர் கடந்த 14 ஆண்டுகளாக குவைத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் மாரடைப்பு நோய்க்கு சிகிச்சைப் பெறுவதற்காக மீண்டும் நாட்டுக்கு திரும்பினார்.

சம்பவத்தன்று விமானக் குழுவினர் எனது கணவரை பலமாக தாக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மற்றும் நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.