தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் 51.2 சதவீத வாக்குகளும், எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் எட்மண்டோ கான்சலஸ் 44.2 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் மதுரோ வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் நிகோலஸ் மதுரோவின் வெற்றியை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை.
தேசிய தேர்தல் கவுன்சிலின் முடிவுகள் மோசடியான ஒன்று. எங்களது வேட்பாளர் எட்மண்டோ கோன்சாலஸ், அதிபர் மதுரோவை தோற்கடித்ததற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
தங்களது வேட்பாளர் எட்மண்டோ கோன்சா 70 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாகவும், அவர்தான் நியாயமான முறையில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ கூறும்போது, நாங்கள் தான் வெற்றி பெற்றோம், வெனி சுலாவின் புதிய அதிபராக எட்மண்டோ கோன்சாலஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றார்.
இதற்கிடையே நிகோலஸ் மதுரோவின் வெற்றியை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன. தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரோவுக்கு எதிராக கோஷமிட்டனர்.
முகமூடி அணிந்த இளைஞர்கள் சிலர் கம்பங்களில் தொங்க விடப்பட்டிருந்த மதுரோவின் பிரச்சார சுவரொட்டிகளைக் கிழித்து எறிந்தனர். பால்கன் மாநிலத்தில் முன்னாள் அதிபர் ஹ்யூகோ சாவேசின் சிலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் இடித்தனர்.
இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சாலைகளில் டயர்களை போட்டு எரித்தனர். சில வாகனங்களுக்கும் தீ வைக் கப்பட்டது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதை யடுத்து போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி ரப்பர் தோட்டாக்களால் சுட்டனர். இதில் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.
சில போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை நோக்கி சென்றனர். அவர் களை போலீசார் தடுத்து நிறுத்தினர். வன்முறை காரணமாக வெனிசுலாவில் பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கிடையே அதிபர் நிகோலஸ் மதுரோவின் வெற்றியை அமெரிக்கா, சில தென் அமெரிக்க நாடுகள் ஏற்கவில்லை. அதே வேளையில் மதுரோவுக்கு ரஷியா, சீனா, கியூபா உள்ளிட்ட நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.