
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்தமைக்காக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து எமது உறுப்புரிமையை நீக்குவது இலகுவான விடயமல்ல. நீதிமன்றத்தின் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் எடுக்கும் போது பாராளுமன்றத்தின் ஆயுட்காலமும் நிறைவடைந்துவிடும்.
எனவே முடிந்தால் பொதுஜன பெரமுன எமது உறுப்புரிமையை நீக்கிக் காட்டட்டும் என வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் பின்னர் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உறுப்புரிமையை நீக்குவது இலகுவான விடயமல்ல. அவர்களால் அவ்வாறு எதனையும் செய்ய முடியாது. மாறாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் நீதிமன்றத்துக்குச் சென்றால் வழக்கு விசாரணைகள் குறுகிய காலத்துக்குள் நிறைவடையாது. எனவே சட்ட ரீதியாக எமது உறுப்புரிமையை நீக்குவதற்கு முன்னரே பாராளுமன்றத்தின் ஆயுட்காலமும் நிறைவடைந்துவிடும்.
நாட்டில் அரசியல் நெருக்கடிகளால் வன்முறை உச்சகட்டத்திலிருந்த போது பிரதமர் பதவியை ஏற்குமாறு விடுத்த அழைப்பை எவரும் ஏற்கவில்லை.
அமைச்சர் ரமேஷ் பத்திரணவும், நானும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கூறி ரணில் விக்கிரமசிங்கவை அழைத்தோம். அவர் சவாலை ஏற்று அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
அவ்வாறிருக்கையில் கறியில் உள்ள கரிவேப்பிலையைப் போன்று இறுதியில் அவரை தூக்கி எறிந்து விட முடியாது. மொட்டில் மலர் பகுதி ரணில் விக்கிரமசிங்கவிடமே இருக்கிறது.
காம்பு மாத்திரமே மறுபுறம் உள்ளது. எமக்கு மக்கள் அளித்த வாக்குகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கு நிச்சயம் இருக்கிறது. ஆனால் அவரது வெற்றிக்காக பாடுபட்ட அனைவரும் தற்போது ஜனாதிபதியுடனேயே இருக்கின்றோம்.
எனவே இதற்கு முன்னர் சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததைப் போன்று ரணில் விக்கிரமசிங்கவையும் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெறச் செய்வோம். மக்களும் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்று நம்புகின்றோம் என்றார்.