பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த லொக்கு பெடி தொடர்பில் வெளியான தகவல்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கிளப் வசந்தவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பாதாள உலக கும்பலைச் சேர்ந்த லொக்கு பெடி என்பவர் பெலாரஸில் வைத்து கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா என்பவர் கடந்த ஜூலை மாதம் 8 ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

பின்னர் இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பாதாள உலக கும்பலைச் சேர்ந்த லொக்கு பெடி என்பவருக்கு இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ரொட்டும்ப அமில என்று அழைக்கப்படும் அமில சேபால ரத்நாயக்க என்பவர் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்துள்ளதாக விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது. 

இந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கியில் கே.பி.ஐ என்ற குறியீடு காணப்பட்டதால் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கஞ்சிப்பானை இம்ரான் என அழைக்கப்படும் மொஹம்மட் நஜீம் மொஹம்மட் இம்ரான் என்பவருக்கும் தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்தனர்.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளில், மேற்குறிப்பிட்ட மூவரும் வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்து இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளன.

இந்நிலையில், துபாயில் தலைமறைவாகியிருந்த பாதாள உலக கும்பலைச் சேர்ந்த லொக்கு பெடி பெலாரஸிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று (01) தகவல் வெளியாகியிருந்தது.

கைது செய்யப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த லொக்கு பெடியை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

லொக்கு பெடி என்பவர்,கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பதுடன் இவர் தலைமையில் பல்வேறு கொலைகள் மற்றும் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன.