இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில்?

முக்கிய செய்திகள் 3

இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் கூட்டப்படுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மாலை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருவதாகவும், நேற்றும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், அதனால் இந்தியா - இலங்கை கூட்டு நடவடிக்கை குழுவின் கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் வாதிட்டார்.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், மீனவர்கள் கைது சம்பவங்களை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து மத்திய அரசு சார்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள், மத்திய அரசின் நடவடிக்கையால் விடுவிக்கப்படுவதாகவும், மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண, இரு நாட்டு செயலாளர்கள் மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா - இலங்கை கூட்டு நடவடிக்கை குழு, விரைவில் கூட்டம் கூட்டி இதுசம்பந்தமாக விவாதிக்க உள்ளதாகவும் விளக்கமளித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசின் வாதத்தை பதிவு செய்து, வழக்கை முடித்து வைத்தனர்.