நாள்தோறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க பொது இடங்களில் பார்க்கிங் செய்வதும் பெரும் பிரச்சனையாகி வருகிறது. இதனை சமாளிக்க பல நாடுகளில் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இங்கிலாந்தில் பார்க்கிங் செய்த 5 நிமிடத்தில் கட்டணம் செலுத்தவில்லை என்றால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்ற விதி அமலில் உள்ளது. இந்த விதியின் கீழ் ஒரு பெண்ணுக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள டர்ஹாம் கவுண்டி பகுதியில் உள்ள டார்லிங் டன்னில் வசித்து வரும் ஹன்னா ராபின்சன் என்ற பெண், சம்பவத்தன்று தனது காரை வழக்கமாக நிறுத்தும் இடத்தில் நிறுத்தி உள்ளார். அவர் பார்க்கிங் செய்வதற்கான கட்டணத்தை கட்டியிருந்த நிலையிலும் அவருக்கு 11,000 பவுன்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.11 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பார்க்கிங் சர்வீஸ் நிறுவனத்திடம் விசாரித்தார். அப்போது ராபின்சன் கடந்த 2021-ம் ஆண்டு முதல் இதுவரை பார்க்கிங் விதிமீறலில் ஈடுபட்டதற்காக ஒவ்வொரு முறையும் 170 பவுன்டுகள் வீதம் 67 முறை என மொத்தமாக அவருக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. கார் பார்க்கிங்கில் போதிய இன்டர்நெட் இணைப்பு கிடைக்காததால், ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் பணம் செலுத்த முடியவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.