இந்தியாவில் வேகமாக பரவும் வைரஸ்: 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பு

இந்தியச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

இந்தியாவில் சண்டிபுரா எனும் வைரஸ் பாதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
 
கடந்த ஜூன் முதல் ஓகஸ்ட் 15 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் மாத்திரம் இந்தியாவில் 245 பேருக்கு அக்யூட் என்செபாலிடிஸ் சிண்ட்ரோம் எனும் மூளையழற்சி நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 82 பேர் உயிரிழந்ததாகவும் இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தற்போது நாடு முழுக்க 43 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு அக்யூட் என்செபாலிடிஸ் சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் 64 பேருக்கு சண்டிபுரா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையின் அறிக்கையை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
 
"சண்டிபுரா வைரஸ் தொற்று இந்தியாவில் அழிந்து போகும் தறுவாயில் உள்ளது. எனினும், தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது," என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
 
குஜராத்தில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை சண்டிபுரா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. நுளம்புகள், பூச்சி வகைகளால் சண்டிபுரா வைரஸ் பரவுகிறது.
 
இந்த நோய்ப் பாதிப்புக்கு குறிப்பிட்ட சிகிச்சை முறை மற்றும் தடுப்பு மருந்து என எதுவும் இல்லை.
 
பாதிப்பு ஏற்பட்டதும் அதனை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கின்றோமோ அதற்கு ஏற்ப நோய்ப் பாதிப்பை குணப்படுத்தும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
 
அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவது மற்றும் 15 வயதிற்கும் கீழ் உள்ள சிறுவர்களைக் கண்காணிப்பது அவசியம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Posts