கடவுசீட்டு வரிசையை முடிவுக்கு கொண்டுவருவது பெரிய விடயம் அல்ல: சுசில்!

செய்திகள் முக்கிய செய்திகள் 2

எரிபொருள், எரிவாயு வரிசையை இல்லாமலாக்கிய எங்களுக்கு கடவுசீட்டு வரிசையை முடிவுக்கு கொண்டுவருவது பெரிய விடயம் அல்ல. என்றாலும் கடவுச்சீட்டு விநியோக பிரச்சினைக்கு விரைவாக தீர்வுகாண தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஆலாேசனை வழங்கி இருக்கிறோம் என சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று  புதன்கிழமை (04)  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இலத்திரணியல் கடவுச்சீட்டு விநியோகம் மாதமாகியுள்ளது. அதேபோன்று இலத்திரணியல் கடவுச்சீட்டு அல்லாத சாதாரண கடவுச்சீட்டு போதுமான தொகை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கையிருப்பில்  இல்லாமல் போனதாலே இந்த பிரச்சினை தலைதூக்க காரணமாகும். மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசெளகரிங்களுக்காக எமது கவலையை தெரிவித்துக்கொள்கிறோம்.

அத்துடன் இந்த கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வாக இலத்திரணியல் கடவுச்சீட்டு நடவடிக்கையை முன்னெடுக்கும்வரை 7இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகளை விரைவாக அச்சிட்டு, விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். ஒரு மாத காலத்துக்குள் இந்த நிலை சாதாரண நிலைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். அதற்கு தேவையான ஆலாேசனைகளை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கி இருக்கிறோம்.

அத்துடன் எரிபொருள், எரிவாயு வரிசையை இல்லாமலாக்கிய எங்களுக்கு கடவுசீட்டு வரிசையை முடிவுக்கு கொண்டுவருவது பெரிய விடயம் அல்ல. அன்று வரிசை நிலை ஏற்பட்டபோது அதற்கு தீர்வுகாண யாரும் முன்வரவில்லை. நாங்கள் அதற்கு தீர்வு கண்டோம். அதனால் கடவுச்சீட்டு வரிசைக்கும் விரைவில் தீர்வு காண்போம் என்றார்.