சஜித்துக்கு ஆதரவளிக்க முன் வந்ததற்கான டீல் என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும்: அங்கஜன்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கை தமிழ் அரசுக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க முன் வந்ததற்கான டீல் என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கேள்வி எழுப்பினார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், கடந்த திங்கட்கிழமை முல்லைத்தீவில் நடந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சின்னையா லோகேஸ்வரன் 13 பிளஸை நடைமுறைப்படுத்தவே இலங்கை தமிழ் அரசுக் கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க முன்வந்ததாக தெரிவித்தார்.

13 பிளஸ் என்பது தொடர்பாக கடந்த காலத்திலும் பேசப்பட்டது. பிளஸ் என்பதற்கு எல்லை இல்லை. பிளஸ் எதுவாகவும் இருக்கலாம். ஒரு காலத்தில் தமிழ் மக்கள் ஈழத்துக்காக போராடினர். ஈழமும் 13 பிளஸ் தான். சமஸ்டியும் 13 பிளஸ் தான். ஆகவே 13 பிளஸ் என்று எதனை சொல்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

அதைச் சொன்னாலே தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் என்ன நடக்கப் போகின்றது என்பது தெரியும். 13 பிளஸ் சமஸ்டியாகவோ ஈழமாகவோ இருந்தால் நான் தமிழனாக பெருமைப்படுவேன்.

இலங்கை தமிழரச கட்சிக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் டீல் இருந்தால் அந்த டீலை வெளிப்படுத்த வேண்டும். 13 பிளஸின் எல்லை என்ன என்பதை கூற வேண்டும்.சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13 பிளஸ் தொடர்பாக எதுவும் இல்லை.

இதனை ஒரே மேடையில் தமிழ் சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இல்லை என்றால் தமிழ் மக்களின் வாக்குகளை போலி வாக்குறுதிகளை பயன்படுத்தி தமிழரசுக்கட்சி நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதாகவே மக்கள் கருதுவார்.

இலங்கை தமிழரசு கட்சியில் ஒரு சிலர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு என்கிறார்கள் ஒரு சிலர் இல்லை இல்லை அவருக்கு ஆதரவு வழங்கவில்லை என்கிறார்கள். இதற்கிடையில் பொது வேட்பாளரின் தேர்தல் அறிக்கை வெளியிட முன்னரே சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது. இதில் சந்தேகம் எழுந்துள்ளது – என்றார்.